Published : 17 Sep 2022 07:32 AM
Last Updated : 17 Sep 2022 07:32 AM

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் இளைஞர் உடல் சொந்த ஊரில் தகனம்: நியாயமான விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியத் தூதர் வைகோவுக்கு கடிதம்

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரனின் சடலத்துக்கு நேற்று திருச்சி விமான நிலையத்தில மலரஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர். .

திருச்சி: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரனின் சடலம் நேற்று விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு செப்டம்பர் 7-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், துரை. சந்திரசேகரன் ஆகியோர் முத்துக்குமரனின் சடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், முத்துக்குமரனின் சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அங்கு தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களில் கடந்த ஆண்டு 152 பேரும், நிகழாண்டு இதுவரை 115 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கு அயலக வேலைவாய்ப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உயிரிழந்தோரின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முத்துக்குமரன்

இதேபோல, வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களில் தாயகத்துக்கு திரும்ப அழைத்துக்கொள்ள விடுத்த கோரிக்கையின்பேரில், கடந்தாண்டில் 315 பேரும், நடப்பாண்டில் 311 பேரும் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அயலக வேலை வாய்ப்புத் துறையில் பதிவு செய்து, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு சட்டப் பாதுகாப்பும், குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

ஆர்.முத்துக்குமரன் படுகொலை குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் வைகோவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரை கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித்தரவும், தனது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறும் கோரி முத்துக்குமரன் மனைவிமு.வித்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, வைகோ செப்.14-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் அனுப்பினார்.

இந்நிலையில், குவைத் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வைகோவுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம். சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணையை மேற்கொள்ளவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கூறியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x