பிஓஎஸ் கருவிகளுக்கு மார்ச் வரை வாடகை ரத்து: இந்தியன் வங்கி சலுகை

பிஓஎஸ் கருவிகளுக்கு மார்ச் வரை வாடகை ரத்து: இந்தியன் வங்கி சலுகை
Updated on
1 min read

டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, வியாபாரிகளுக்கு வழங்கியுள்ள கார்டு தேய்க்கும் ‘பிஓஎஸ்’ கருவிக்கான வாடகை 2017 மார்ச் வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு, ‘டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை’ அதிகரிக்கும் வகையில், பொதுமக்கள் வங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு வசதியாக இந்தியன் வங்கி சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. இதன்படி, ‘ருபே’ டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதற்காக வியாபாரிகளுக்கு ‘பாயின்ட் ஆஃப் செல்லிங்’ (பிஓஎஸ்) கருவியை இந்தியன் வங்கி வாடகைக்கு வழங்கியுள்ளது. இக்கருவிகளுக்கான வாடகை 2017 மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, டெபிட் கார்டு சேவையை வியாபாரிகள் பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ‘எம்டிஆர்’ (மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணமும் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ‘ஸ்கேன் அண்ட் பே’ என்ற திட்டத்தின் மூலம், ‘இந்த்பே’ என்ற செயலியை (IndPay App) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த தொகையை கடையில் பணமாக செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக, கடைக்காரரிடம் இருக்கும் க்யூஆர்கோடு (QR Code) கருப்பு வெள்ளை கட்டங்களை செயலி வழியாக ஸ்கேன் செய்து, உரிய பணத்தை டைப் செய்தால், வியாபாரியின் வங்கிக் கணக்குக்கு அத்தொகை நேரடியாகச் சென்றுவிடும். உடனே கடைக்காரர், வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் குறுந்தகவலும் வந்துவிடும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in