Published : 14 Sep 2022 12:40 PM
Last Updated : 14 Sep 2022 12:40 PM

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலைக் கொண்டுவர நடவடிக்கை தேவை: வைகோ

வைகோ | கோப்புப் படம்.

சென்னை: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார். வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார். இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7ஆம் தேதி புதன் கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து, அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவலைத் தெரிவித்து, முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒன்றிய வெளியுறவுத்துறை இதில் உடனடியாகத் தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், குவைத் நாட்டிடமிருந்து முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இது தொடர்பாக இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சரிடமும் தொடர்புகொண்டு வலியுறுத்த இருக்கிறேன்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x