Published : 14 Sep 2022 07:11 AM
Last Updated : 14 Sep 2022 07:11 AM
சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 2 நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு 517 இடங்கள் உள்ளன.
பால்வள தொழில்நுட்ப படிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்|களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. 2 நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
கிராமப்புறமாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க வசதியாக, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்து மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் அனுப்பலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT