பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; அதிமுகவினர் குவிந்ததால் பதற்றம்

இலுப்பூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு.
இலுப்பூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு.
Updated on
2 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (செப்.13) சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் வீட்டைச் சுற்றிலும் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த 2017-ல் நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது, குட்கா விற்பனை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலுப்பூரில் உள்ள வீடு உட்பட தமிழகத்தில் உள்ள இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு ஆணங்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இலுப்பூர் சவுராஸ்டிரா தெருவில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சோதனை நடத்தப்படும் வீட்டைச் சூழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் விவரம்: முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in