

மதுரை: தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கிய அடையாள லோகோ பதிக்கப்பட்ட சீருடையுடன் காவலர் கள், அதிகாரிகள் மிடுக்காக வலம் வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் காவலர் முதல் டிஜிபி வரை பதவி உயர்வு, அதிகாரம், தகுதிக்கு ஏற்றவாறு சீருடை அமைகிறது. இரண்டாம் நிலைக் காவலர் முதல் டிஜிபி வரை, அனைத்துப் பிரிவு போலீஸாரின் நிலையைக் குறிக்கும் விதமாக அசோகச் சின்னம் உள்ளிட்ட சில அடையாளங்கள் இடம் பெறுகின்றன.
இருப்பினும், காவல்துறையைகுறிப்பிடும் விதமாக தனித்துவமான அடையாளம் இல்லை என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், வடமாநிலங்களில் இருப்பது போன்று மாநிலப் பெயரை குறிக்கும் வகையில் காவல் துறையில் ஒரே அடையாள லோகோ இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிய லோகோவில் வில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி ஆகியவற்றுடன் ‘தமிழ்நாடு காவல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லோகோவும் சீருடையில் இடம் பெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழககாவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார்தலைமையில் சுமார் 100-க்கும்மேற்பட்ட லோகோ-க்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தேர்வானது.
அதில் , ஸ்ரீவில்லித்தூர் கோபுரத்தின் கீழ் அசோக சின்னம், தேசிய கொடி, கோபுரத்தை சுற்றி தமிழ்நாடு போலீஸ் மற்றும் வாய்மையே வெல்லும் என்ற ஆங்கிலச் சொற்களும், காவல் என்ற தமிழ் வார்த்தையும் இடம் பெற்றுள்ளன.
அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப காக்கி சீருடையில் இடது கையில் ஸ்டிக்கர் வடிவிலான லோகோவை ஒட்டுதல் அல்லது டெய்லர் மூலம் தைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது,‘லோகோ’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த லோகோ தனித்துவமாக உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வரால் இந்த ‘லோகோ’ அணியும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த லோகோ கம்பீரமாக உள்ளது. காவல்துறையில் அனைத்து போலீஸாரும் இந்த லோகோவை அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.