

அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி யினர் ஆகியோரின் தொடர் வருகை யால், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை கட்சி அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகமாக மாறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் அவர் வழிநடத்திச் செல்கிறார். முக்கிய திட்டங்கள் அவரால் மட்டுமே அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் 15 நாட்களாக மருத்துவமனையில் இருப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பதில் சுணக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் பணிகள் தொடர்ந்தாலும், அடுத்தகட்ட பணிகளை எப்படி மேற்கொள்வது என அதிகாரிகள் குழம்பிப் போய் உள்ளனர்.
முன்னதாக முதல்வர் ஒப்புதலுக்கு ஒரு துறை சார்ந்த பல கோப்புகள் சென்றால், அவை அனைத்துக்கும் ஒரே உத்தரவு தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டு விடும். இந்நிலையில், முதல்வர் மருத்துவமனையில் உள்ள தால், யாரை சந்திப்பது, யாரிடம் ஒப்புதல் பெறுவது என்பதில் அதிகாரிகள் தயங்கி நிற்கின்றனர். இதனால், சமீபத்தில் சட்டப்பேரவை யில் முதல்வர் அறிவித்த, அரசு பெண் ஊழியர்களுக்கான 9 மாத பேறு கால விடுப்பு, தொழில்நுட்பத்துறை தொடர்பான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான அரசா ணைகளுக்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு முதல்வர் அலுவலகத் துக்கு அனுப்பி காத்திருக் கின்றனர்.
முதல்வரின் அனுமதி முக்கியம் என்பதால், துறை அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களுக்கான ஒப்புதலை வழங்க தயங்கி வருகின்றனர். இதனால், துறைகளின் செயலர்கள், தினமும் அப்போலோ மருத்துவமனை வந்து, தலைமைச் செயலர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து, துறை திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் அரசாணைகள் வெளியீடு மற்றும் திட்டங்களின் தொடக்கத்தையும் பாதித்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் இருப்பதன் தாக்கம், ஆட்சி நிர்வாகத்தை மட்டுமின்றி கட்சியினர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று முதலே, கட்சியினர் தொடர்ந்து வந்து உடல்நிலை தொடர்பான தகவல்களை விசாரித்து செல்கின்றனர். இதற் கிடையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. மறுநாளே வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியது. அன்றே, அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டிலும் வெளியானது.
பொதுவாக வேட்பாளர் பட்டியல் வெளியானால், அதிருப்தியாளர்கள் புகார் அளிப்பது வழக்கம். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்ததால், யாரிடம் புகார் அளிப்பது என்று பலரும் தவித் தனர்.
இந்நிலையில்தான், தற்போது உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு அதற்கான பணியில் மும்முர மாக ஈடுபட்டிருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் தினசரி அப்போலோ மருத்துவமனை வந்து முதல்வரின் உடல்நலம் தொடர்பாக விசாரித்து செல்கின்றனர்.
வழக்கமாக அமைச்சர்களும் தினசரி காலை வந்து, முதல்வரின் உடல் நிலை தொடர்பான தகவல்களை விசாரித்து செல்கின்றனர். இவ்வாறு அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினரின் தொடர் வருகையால், அப்போலோ மருத்துவமனை கட்சி அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகமாக மாறிவிட்டது.
அன்றாடப்பணியில் அமைச்சர்கள்
அமைச்சர்களைப் பொறுத்தவரை, வார வேலை நாட்களில் தலைநகர் சென்னையில் இருப்பதும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுதிப் பக்கம் சென்று பணியாற்றுவதும் வழக்கம். கடந்த 15 நாட்களாக அவர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து அரசுப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். குஜராத்தில் நடக்கும் மின்துறை தொடர்பான மாநாட்டில், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்றுள்ளார். இதுபோல் மற்ற அமைச்சர்களும் அவ்வப்போது வந்து அமைச்சர்களின் பணிகள் வழக்கம் போல் நடந்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.