Last Updated : 10 Sep, 2022 06:30 AM

 

Published : 10 Sep 2022 06:30 AM
Last Updated : 10 Sep 2022 06:30 AM

‘பசுமைத் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரியில் நடவு செய்ய 4 லட்சம் மரக்கன்று தயார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நடவு செய்ய தயார் நிலையில் உள்ள மரக்கன்றுகள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 4,02,056 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் 5,143 சதுர கி.மீ கொண்டது. இதில், 2,024 சதுர கி.மீ வனப்பகுதி. அதாவது சுமார் 40 சதவீதம் நிலப்பரப்பு வனப்பகுதியாக உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி பகுதிகளில் பெருகி வரும் தொழிற்சாலைகளால் குளிர்ந்த சீதோஷ்ணநிலை மாறி வருகிறது. குறிப்பாக எப்போதும் குளுமையாக காணப்படும் ஓசூர் பகுதியில் வெப்பத்தின் தாக்கத்தை உணரமுடிகிறது.

இதனால் அரசு அலுவலகம், தனியார் அலுவலகங்கள், பள்ளி, வீடுகளில் உள்ள காலி இடங்களில் மரங்கள் வளர்ப்பினை ஊக்குவிக்க தமிழக அரசும், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தை மேலும் பசுமையாக்கும் வகையில் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறையினர் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

31 வகை மரக்கன்றுகள்

இதுதொடர்பாக சமூக காடுகள் மற்றும் விரிவாக்க மையத்தின், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தில் 'பசுமைத் தமிழ்நாடு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.

2022-23-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் பரப்பை 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இக்கோட்டத்தில் போலுப்பள்ளி, கூசுமலை, மாதேப்பள்ளி, நாகதொணை மற்றும் பேரண்டப்பள்ளி ஆகிய மத்திய நாற்றங்கால்களில், சந்தனம், சிவப்பு சந்தனம், வேம்பு, மந்தாரை, சவுக்கு, ஈட்டி, இலுப்பை, மலைவேம்பு, புங்கன், வேங்கை, செம்மரம், மகாகனி, தேக்கு, பூவரசன், நாவல் உட்பட 31 வகையான 4,02,056 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன.

68.41 சதுர கி.மீ பசுமை போர்வை

இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகளால் பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா 2019-ன் படி, காப்புக் காட்டுக்கு வெளியே 68.41 சதுர கி.மீ பசுமை போர்வை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், கோயில் வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், ஊராட்சி ஏரிகள், அரசு நிலங்கள், நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளின் ஓரங்களில் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் நடவு செய்து கொடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இக்கோட்டத்தின் வனச்சரக அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x