

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2வது நாளாக இன்று (7ம் தேதி) காலை விநாடிக்கு 19,478 திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று (6-ம் தேதி) நீர்வரத்து விநாடிக்கு 5,932 கனஅடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 7842 கனஅடியாக அதிகரித்தது. அணையில் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 42.15 அடிக்கு உள்ளதால், அணையின் பாதுகாப்பினை கருதி விநாடிக்கு 7,680 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீரும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 11 தடுப்பணைகள் மூழ்கடித்தப்படி தண்ணீர் சீறி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மார்கண்டேய நதியிலும் வெள்ளப்பெருக்கு: இதே போல் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரங்களில் பெய்த கனமழையால், மார்கண்டேய நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாரசந்திரம் தடுப்பணை நிறைந்து, தண்ணீர் அதிகளவில் சீறி பாய்ந்து செல்கிறது. குருபரப்பள்ளி, எண்ணேகோல்புதூர் பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கெலவரப்பள்ளி, மார்கண்டேய நதியில் வரும் தண்ணீர் ஒன்றாக கலந்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து 17,288 கனஅடி: அதன்படி இன்று காலை 6.40 மணியளவில் அணைக்கு நீர்வரத்து 17,288 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.10 அடியாக இருந்ததால், வெள்ள அபாய ஒலி எழுப்பப்பட்டு. 8 மதகுகள் வழியாக விநாடிக்கு 19,478 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 2வது நாளாக ஒரே அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி, சிறு தடுப்புகளில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. அணைக்குவர சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை: தென்பெண்ணை ஆறு செல்லும் கடந்து செல்லும் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் உட்பட செல்லும் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்பு ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதே போல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை (7 மணி நிலவரப்படி) கிருஷ்ணகிரி அணையில் 82.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.