சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், வாழும் கலை  அமைப்பு சார்பில் நேற்று நடந்த 'போதையை தவிர்ப்போம், போதையை தடுப்போம்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறந்த குறும்படங் கள் எடுத்த கல்லூரி மாணவர்கள், போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கல்லூரிகளில் மேற்கொண்ட பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.படம்: பு.க.பிரவீன்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், வாழும் கலை அமைப்பு சார்பில் நேற்று நடந்த 'போதையை தவிர்ப்போம், போதையை தடுப்போம்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறந்த குறும்படங் கள் எடுத்த கல்லூரி மாணவர்கள், போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கல்லூரிகளில் மேற்கொண்ட பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.படம்: பு.க.பிரவீன்

போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க அரசுடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர்

Published on

போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ‘போதையை தவிர்ப்போம் போதையை தடுப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறந்த குறும்படங்கள் எடுத்த கல்லூரி மாணவர்கள், போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கல்லூரிகளில் மேற்கொண்ட பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, 'போதையை தவிர்ப்போம், போதையை தடுப்போம்' என்று மாணவர்கள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

போதை பழக்கங்களினால் பல வழிகளில் இளைய சமுதாயம் சீரழித்து வருகிறது. பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துகள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வியாபாரிகள் கடைகளில் எப்படியாது விற்பதற்கு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை தடுக்க அரசுகள் முயற்சித்தாலும் முழுமையாக பலன் கிடைப்பதில்லை. அண்டை மாநிலங்களில் தடை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். ஒசூரில் இருந்து வரக்கூடிய காய்கறி, பூக்களை கொண்டு வரும் வாகனம் மூலம் போதை பொருட்களையும் தமிழகத்துக்கு கொண்டு வருகின்றனர்.

இதனை காவல்துறை கண்டுபிடித்து அழித்து வருகிறது. விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் ஆதாரத்துடன் அளித்த தகவலின் பேரில் ஆந்திராவில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டால் தான் போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.

போதை பொருட்கள் மாணவர்கள் மத்தியில் பரந்து விரிந்துள்ளது. இளைய தலைமுறை வாழ்வை சீரழித்து வரும் போதை வஸ்துகளை எப்படியாவது தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி எடுக்கும்போது எதிர்காலத்தில் நிச்சயம் போதை இல்லா இந்தியா உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in