

தற்போது நாணயங்கள் வெறும் நிதி புழக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால், பண்டைக் காலத்தில் வெளியிடப் பட்ட ஒவ்வொரு நாணயத்துக்குப் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு ஒளிந்திருக்கிறது என்கிறார் பழமையான நாணயங்கள் சேமிப் பாளரான வா.சுரேஷ்.
திருவாரூர் மாவட்டம் கள்ளிக் குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சுரேஷ். ஆசிரியர் பணிக்கு வருவ தற்கு முன்பே நாணயங்கள் சேமிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் இப்போது, தாம் சேமித்த நாணயங்களைக் காட்சிப்படுத்தி, அதன்மூலம் வரலாற்று நிகழ்வு களை மாணவர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி வருகிறார்.
386 நாணயங்கள்
கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி காலம் வரை இந்தியாவில் வெளி யிடப்பட்ட அரிய நாணயங்களில் மட்டுமே 386 நாணயங்களை தனது சேகரிப்பில் வைத்திருக்கும் சுரேஷ், இதில் சுமார் 250 நாணயங்களின் பின்னணி தகவல்களையும் வைத்திருக்கிறார். தனது பள்ளியில் மட்டுமல்லாது ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் நடத்தப்படும் சிறப்புக் கண்காட்சிகளில் தனது நாணயங்களைக் காட்சிப்படுத்தி வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்குப் புரியவைக்கிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
‘‘பள்ளிப் பருவத்தில் இருந்தே நாணயங்களைச் சேகரித்த நான், தொடக்கத்தில் வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அஞ்சல் தலைகள் இவைகளை மட்டும்தான் சேகரித்தேன். ‘இப்போது நீங்கள் சேகரித்துக் கொண்டிருப்பவைகளை யாரும் எளிதில் சேர்த்துவிட முடியும். ஆனால், மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட இந்தியா வின் பழமையான நாணயங்களைத் தேடிச் சேர்ப்பது கடினம். முடிந்தால் அதற்கு முயற்சியுங்கள்’ என்று நண்பரின் தந்தை சொன்ன பிறகுதான் இந்தியாவின் பழமை யான நாணயங்களைத் தேட ஆரம்பித்தேன்.
அப்படி நாணயங்களைத் தேட ஆரம்பித்தபோது எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வெறும் நாணயங்களை மட்டும் சேகரித்து வைக்காமல் அவற்றின் பின்னணி விவரங்களையும் திரட்ட ஆரம்பித்தேன். மன்னர்கள் தங்கள் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வு களை, தங்களின் சாதனைகளைக் கல்வெட்டுகளாக, செப்புப் பட்ட யங்களாக வடித்தார்கள். அதுமட்டு மல்லாமல், தங்களுடைய சாதனை கள் சாமானிய மக்களையும் சென்ற டைய வேண்டும் என்பதற்காக நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றில் முக்கியமான நிகழ்வு களைக் காட்சிகளாக வடித்தார்கள்.
என்னிடம் உள்ள ஒரு நாணயத்தில் யானையோடு சேவல் ஒன்று சண்டையிடும் ஒரு காட்சி உள்ளது. சோழ நாட்டின் தலைநகரை மாற்ற நினைத்த ராஜேந்திர சோழன் அதற்குத் தகுந்த இடத்தைத் தேடியபோது இப்போதைய உறையூர் பகுதியில், சேவல் ஒன்று யானையுடன் சண்டையிடும் காட்சியைக் கண்டு வியந்து, அந்த அரிய காட்சியை நாணயமாக வடித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு நாணயத்துக்குப் பின்னாலும் ஒரு கதை, நிகழ்வு இருக்கிறது.
சுரேஷ்
கற்பித்தலின் துணைக் கருவி
அந்த பின்னணிகளை எல்லாம் உரிய வல்லுநர்களிடமும் அவர் கள் வெளியிட்டிருக்கும் ‘கேட்லாக்’ குகளில் இருந்தும் திரட்டி வைத்திருக்கிறேன். அருங்காட்சி யகங்களில் ஒரு கண்ணாடி டப்பா வில் நாணயங்களைக் கொட்டி வைத்து, ‘இது இந்த பேரரசு காலத்து நாணயங்கள்’ என்று மட்டும் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், என்னிடம் அந்த நாணயங்களைப் பற்றிய முழுவிவரமும் இருக்கும்.
நான் அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் வரலாற்றுப் பாடத் தையும் கற்பிக்கிறேன். முகலாயர் பேரரசு பற்றி பாடம் நடத்தும் போது, ‘முகலாயர்கள் காலத்தில் இந்த நாணயம்தான் பயன்படுத்தப் பட்டது’ என்று மாணவர்களின் கண்ணெதிரே நாணயத்தைக் காட்டும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பாடத்தை உள் வாங்குகிறார்கள். இதன்மூலம் கற்பித்தலின் ஒரு துணைக் கருவியாக நாணயத்தைப் பயன் படுத்த முடிகிறது. நாணயங்கள் சேகரிப்பு ஒரு சேமிப்பு மட்டுமல்ல; வரலாற்றைப் பாதுகாக்கும் விஷயம் என்பதுதான் எனது பார்வை’’ என்றார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கற்பித்தலில் புதுமை செய்யும் ஆசிரியர்கள் சிலரது கற்பித்தல் முறைகளைக் காட்சிப்பதிவாக தனது வலைத்தளத்தில் அண்மை யில் பதிவேற்றம் செய்திருக்கிறது. இதில் சுரேஷின் கற்பித்தல் முறையும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.