முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னை, நாகர்கோவிலில் காங்கிரஸார் அஞ்சலி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய்வசந்த் எம்.பி. வினோத்குமார் மற்றும் குடும்பத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய்வசந்த் எம்.பி. வினோத்குமார் மற்றும் குடும்பத்தினர்.
Updated on
1 min read

சென்னை/நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவு தினம் சென்னை மற்றும் நாகர்கோவிலில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், வசந்தகுமாரின் சகோதரருமான குமரி அனந்தன் பங்கேற்று, வசந்தகுமார் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் பரம்பரையில் வந்த நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, கட்சிக்காக உழைத்தேன். அதேபோல, எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தனர். அவர்களில் முக்கியமானவர் வசந்தகுமார். அவரது பரம்பரையினரும் காங்கிரஸூக்காக உழைப்பார்கள்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர்கள் காண்டீபன், எம்.எஸ்.காமராஜ், வடசென்னை மாவட்டச் செயலர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் நினைவிடத்தில், அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த் எம்.பி. வினோத்குமார் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.டி.உதயம், பிரின்ஸ் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தகுமார் படத்துக்கு, மாவட்டத் தலைவர் பினுலால்சிங் மற்றும் நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த வசந்தகுமார் படத்துக்கு, ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in