

புதுச்சேரி: புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் அனிபால்கென்னடி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிக்கும்போது, "புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துகளை இணைத்து நகராட்சிகளாகவும் உருவாக்க திட்டம் உள்ளது" என்றார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா, "வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடர வேண்டும். நகராட்சியாக மாற்றினால் புதிய வரி விதிப்பீர்கள். இது மக்களுக்கு அவதியை ஏற்படுத்தும்" என்றார்.
அதேபோல் திமுக உறுப்பினர் செந்தில்குமார் கூறும்போது, "அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தாக இருப்பதால் ஊரக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நகராட்சியாக மாறினால் இத்திட்டங்கள் தடைபடும்" என்றார்.
பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினர் சிவசங்கர் பேசும்போது, "புதுவை நகராட்சியோடு, உழவர்கரை நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக்குவதன் மூலம் உழவர்கரையில் பல மேம்பாட்டு பணிகள் நடைபெறும். எனவே மாநகராட்சியாக தரம் உயர்த்துங்கள்" என வலியுறுத்தினார்.
அப்போது முதல்வர் "விரைவில் 2 நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்தார்.