

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான உடல்தகுதித் தேர்வில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற 2,484 பேருக்கு உடல் தகுதித் தேர்வு நடக்கிறது.
சென்னை, கோவை, மதுரையில் ஆண்களுக்கும், சேலம், திருச்சியில் பெண்களுக்கும் என 5 இடங்களில் தேர்வு தொடங்கியது. நேற்று சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வுக்கு 413 பேர் அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், உடல் தகுதித் தேர்வும் நடந்தது. டிஜிட்டல் மீட்டர் கருவி மூலம் பெண்களுக்கான உயரம் அளவீடு செய்யப்பட்டது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. தேர்வு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன.
உடல்தகுதி தேர்வை காவல்துறை ஐஜி அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகர காவல் துறை ஆணையர் நஜ்முல்ஹோடா, காவல் துணை ஆணையர் லாவண்யா மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.