Last Updated : 23 Aug, 2022 04:38 PM

 

Published : 23 Aug 2022 04:38 PM
Last Updated : 23 Aug 2022 04:38 PM

“இதுவரை 13 முறை தீர்மானம்... புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் வலியுறுத்துவோம்” - முதல்வர் ரங்கசாமி

ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: "கடந்த 5 ஆண்டு காலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடந்தது, எப்படிப்பட்ட அதிகார பகிர்வுகள் மாறியுள்ளது என்பதை எம்எல்ஏக்கள் தெளிவாக வெளிப்படித்தியுள்ளனர். யாரும் மறைக்கவில்லை.

எம்எல்ஏக்கள் எல்லோரும் ஆட்சியில் நடைபெற்றது என்ன, எவ்வாறு அதனை சரி செய்ய வேண்டும் என்ற நிலையை சொல்லியிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.

இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டு சரி செய்ய வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. ஆகவே, அந்தப் பொறுப்பிலிருந்து வழிமாறாமல் சிறந்த முறையில் புதுச்சேரி மாநிலத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். மத்திய அரசிடம் எதைக் கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது நடக்காது. இதனை பல ஆண்டுகளாக பார்க்கிறோம்.

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் தொடங்கியபோது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது முழு மூச்சாக இருக்கும் என்று பேசினோம். இது தொடர்பாக சட்டப்பேரவையில் 13 முறை தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். மாநில அந்தஸ்து வந்தால்தான் நமக்கு எல்லா அதிகாரமும் கிடைக்கும், நம்முடைய திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது எங்களுடைய என்னமும் கூட. இப்போதும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.

எம்எல்ஏக்கள் சொல்வதுபோல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசை வலியுறுத்தலாம். மாநில அந்தஸ்து பெற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

அது இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும், திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியாது என்பதும் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. ஆதலால் கொஞ்சம் பொறுமையாகத்தான் கிடைக்கும். ஆனாலும் தொடர்ந்து வலியுறுத்துவோம். கிடைக்கும்போது நாம் மகிழ்ச்சியடைவோம். ஆளுநர் உரையில் கடந்த ஓராண்டில் நாம் என்ன செய்துள்ளோம். இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

நிர்வாகத்தில் ஒரே எண்ணம் உள்ளவர்கள் இருக்கும்போது திட்டங்கள் விரைவாக செய்வார்கள். இதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்போது அதனை செய்து கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்போதோ வந்தது. ஆனால் கடந்த ஆட்சியிலும், நம்முடைய ஓராண்டு ஆட்சியிலும் ஒன்றும் செய்யவில்லை. ஓராண்டு முடியும் தருவாயில் பணிகளை பகிர்ந்து கொண்டு தொடங்கியுள்ளோம். ரூ.1,000 கோடியில் ரூ.3.6 கோடியே 2 லட்சம்தான் செலவு செய்யப்பட்டிருந்தது. இது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியை இப்போது விரைவுப்படுத்தியுள்ளோம். நிர்வாகத்தில் சங்கடங்கள் நிறைய இருக்கிறது. கோப்புகள் சென்று திரும்பி வருகிறது என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொல்லுகின்றனர். கடந்த காலத்தில் நிர்வாகத்தின் நிலை மாறியதை, மறுபடியும் மாற்றி விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எதிர்காலத்தில் சிறந்த ஒரு நிலையை கொண்டுவரும் நடவடிக்கையை அரசு எடுக்கும். ஆளுநர் உரை மீது எம்எல்ஏக்கள் உரையாற்றி, சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளனர். என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளனர். மூடப்பட்ட ஆலைகளை திறக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். போகப்போக நடந்து கொண்டிருக்கின்ற ஆலைகளைக்கூட மூடும் நிலைகள் தான் இருந்து கொண்டிருக்கிறது.

அதனை சீர்தூக்கி பார்த்து, நடைமுறையில் எதை கொண்டு வர முடியும் என்பதை கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிதிநிலையை பொறுத்தவரையில் மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளளோம். அந்த நிதியுதவி நமக்கு கிடைத்தால் இன்னும் விரைவாக செயல்படுத்த முடியும் என்பது அரசின் எண்ணம். அதற்கு ஏற்றவாறு திட்டங்களை செல்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x