Published : 21 Aug 2022 05:09 AM
Last Updated : 21 Aug 2022 05:09 AM

பரந்தூர் பகுதியில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் முழு விவரம்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பகுதியில் சுற்றுப்புற நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 18-ம் தேதி ‘நீருக்குள் ஒரு விமான நிலையம்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

அதில், ‘பரந்தூர் அமைந்துள்ள 500 சதுர கி.மீ. பரப்பு கொண்ட அடையாறின் தென்மேற்குப் பகுதியில் இருந்துதான் கடந்த 2015-ல் 3,000 கன மீட்டர் வெள்ளம் பெருக்கெடுத்து அடையாறை மூழ்கடித்தது. பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 4,500 ஏக்கர் பரப்பு, கட்டுமானங்களால் மூடப்படுகிறது என்று வைத்துக்கொண்டால்கூட, 2015-ல் செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறிய நீரில் பாதி அளவு, கட்டப்பட உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளியேறும். இப்பகுதியில், விமான நிலையம் அமைப்பது என்பது கட்டுமானப் பரப்பை அதிகரிப்பதே. அதாவது, மழை மண்ணுக்குள் நுழைவதையும், நீர் சேமித்து வைக்கப்படும் பரப்பையும் குறைக்கும் என்றே அர்த்தம்’ என்று, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் அந்த கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் 2028-ல் சென்னை விமான நிலையம் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 3.50 கோடி பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும். ஆனால்,விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள், கட்டிடங்கள் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினம்.

ஏற்கெனவே உள்ள 3 விமான நிலைய முனையங்கள், தற்போது கட்டப்பட்டு வரும் 4-வது முனையம் ஆகியவை இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகே விமானங்கள் நிறுத்தும் இடத்தை அமைப்பதும் கடினம்.

புதிய விமான நிலையம் அவசியம்

தவிர, சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களின் வளர்ந்து வரும் வணிகம்,வர்த்தகம், தொழில்கள், சுற்றுலா, விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சென்னைக்கு அருகில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது இன்றியமையாதது. தமிழகம் மற்றும் இந்தியாவின் முக்கியநகரங்களை சென்னையுடன் இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்துசெயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில், கடந்த 2008-ல் 3-வது இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. 2008-ல் 5-வது இடத்தில் இருந்த அப்போதைய பெங்களூரு விமான நிலையம், புதிய விமான நிலையம் அமைத்த பிறகு, சென்னை விமான நிலையத்தைவிட அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை முறையே 14 சதவீதம், 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேநேரம், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 சதவீதமாக மட்டுமே உள்ளது.

2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால், சென்னை மற்றும்சுற்றியுள்ள பகுதிகளின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கம் அடையும். விமானப் போக்குவரத்து மற்றும் அதுதொடர்பான பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழகம் இழக்கும். எனவேதான் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம், அடுத்த 30-35 ஆண்டுகளுக்கான எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தற்போதைய சென்னை விமானநிலையமும் தொடர்ந்து செயல்படும்.

பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு அமைப்பதற்கும் சுமார் 4,700 ஏக்கர் தொடர்ச்சியான நிலங்கள் தேவை. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு, சமூக பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டுதான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூரில் உள்ள நீர்வழித் தடங்களின் நீரோட்டம் எவ்வித தடையும் இன்றிதமிழக அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும்.

உயர்நிலை தொழில்நுட்பக் குழு

விமான நிலைய செயல்பாட்டால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும். புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்யவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், புதியதொழில்நுட்பங்கள், மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும் உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்

இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ளநிலங்களுக்கு, விவசாயிகள் நலனில்மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மறுவாழ்வு, மீள்குடியேற்றத்துக்காக சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும்.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் ஆய்வுப்படி, புதிய விமானநிலையம் மூலம் விமான போக்குவரத்துக்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூ.100-க்கும், ரூ.325 அளவுக்கு பொருளாதார பலன்களுடன், ஒவ்வொரு 100 நேரடி வேலைவாய்ப்புகளும், 610 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழகம் பல மடங்கு அதிகமாக தொழில், பொருளாதார வளர்ச்சி அடையும். இதன்மூலம், பரந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன், விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களும் அவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x