

சென்னை வளரத் துடிக்கிறது; பரந்தூரில் இரண்டாவது விமானநிலையம் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால், சென்னைக்குப் பாதிப்பு ஏற்படாமல், அங்கே குடியிருப்பவர்களுக்கு, அங்கிருந்து தொலைவில் உள்ள பகுதிகளின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல், இரண்டாவது விமானநிலையத்தைப் பரந்தூரில் அமைப்பது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதிலை இயற்கை வரங்களில் ஒன்றான நீரிடம் கேட்க வேண்டும்.
நீர்தான் சென்னைக்கு ஆதாரம். சென்னையின் நிலப்பரப்பு தட்டையான கடலோர நிலப்பகுதி. சென்னையை அரவணைத்திருக்கும் வங்காள விரிகுடா, தாறுமாறாகக் கொட்டித் தீர்க்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைத் தாங்குகிறது. சென்னைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. நீரியல் விதிகளை மீறினால், அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடுவதற்கு எந்த வழியும் இல்லை.
வெள்ளம் தாங்கிகள்: வெள்ளம் அல்லது வறட்சி ஏன் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள தனித்துவ அறிவெல்லாம் தேவையில்லை; நீரோட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் கவனிப்பதே போதுமானது. மழைநீர் பூமியைத் தொடும்போது, ஒன்று அது பூமிக்குள் நுழையப் பார்க்கும் அல்லது வழிந்தோடப் பார்க்கும். மழையின் அளவு, தீவிரம், நிலத்தின் பயன்பாடு, நிலத்தின் மேற்பரப்பு, நிலத்தின் மேலுள்ள கட்டுமானம், மரம் வளர்ந்துள்ள பகுதிகள் போன்றவற்றைப் பொறுத்து இவை நிகழும்.
இயற்கையாகப் பெருக்கெடுத்துக் கடலில் கலக்கும் நான்கு நீர்நிலைகளின் கடைப்பகுதியில் சென்னை அமைந்துள்ளது. ஐடி தொழில்வளாகப் பகுதி, கிழக்குக் கடற்கரைச் சாலையின் மேற்கே உள்ள பகுதிகளின் நீரை கோவளம் உப்பங்கழி - கழிமுகமும் பள்ளிக்கரணை சதுப்புநிலமும் தாங்கிக்கொள்கின்றன. மாநகரத்தின் தெற்கு, மத்தியப் பகுதிகளின் வழியாக அடையாறும் கூவமும் பாய்கின்றன.
ஆனால், இவற்றின் வெள்ளம் தாங்கும் வெளி (floodplains - ஆற்றின் கரைகளை ஒட்டியுள்ள, கூடுதல் நீர் பரவி நிற்கின்ற, தாழ்வான பகுதி) அனைத்தும் கட்டுமானங்களால் மூடப்பட்டுவிட்டன. மாநகரத்தின் வடக்கு ஓரத்தின் வழியே செல்லும் கொற்றலை (கொசஸ்தலை) ஆறு எண்ணூர் கழிமுகத்தில் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு நதியும் குறிப்பிட்டதொரு வடிநிலத்தில் விழும் நீரை வெளியேற்றுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள நீர்வளம் நிறைந்த நிலப்பரப்புகள் கலவையானவை.
அடையாற்றைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?:
அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 720 சதுர கி.மீ. இந்தப் பரப்பில் 450 ஏரிகளும், தாங்கல்களும் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்கு வெள்ளம் வெளியேற்றப்பட்ட நீர்தான் 2015 பெருவெள்ளத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால், வேறுபல காரணங்களும் இருக்கின்றன என்பதை ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2015 நவம்பரில் மிக அதிக மழை பெய்தது; இப்பகுதியில், கடந்த 100 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் 1,000 மி.மீ-க்கு மேல் மழை பெய்த இரண்டாவது ஆண்டு அது.
நவம்பரில் பெய்த மழையினால் மண் பூரித்துவிட்டிருந்தது. ஒரு சொட்டு நீரை உறிஞ்சும் திறன்கூட நிலத்துக்கு இல்லாமல் போயிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த டிசம்பரிலும் கடும் மழை பொழிந்தது.
அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த அனைத்து ஏரிகளும் தளும்பத்தளும்ப நிரம்பியிருந்தன. வெள்ளம் உருவான நாளன்று செம்பரம்பாக்கத்தில் இருந்து நொடிக்கு 800 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. அடையாறின் நீர் கொள்ளளவுத் திறனான நொடிக்கு 2,038 கன மீட்டர் என்பதைக் காட்டிலும் இந்த அளவு மிகவும் குறைவு.
செம்பரம்பாக்கம் ஏரிக்குள் அடங்காத மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதி ஏரிகளிலிருந்து அப்போது வெளியேறிய நீரின் பங்களிப்பு மட்டுமே நொடிக்கு 3,000 கன அடியாக இருந்தது. எனவே, மாநகருக்குள் நுழைந்த வெள்ளத்தின் அளவு நொடிக்கு 3,800 கன மீட்டர் (1,34,195 கன அடி).
இது அடையாறின் வெள்ளம் தாங்கும் திறனைக் காட்டிலும் மிகவும் அதிகம். வெள்ளத்தைக் கடத்துவதற்கான அடையாறின் திறன் நொடிக்கு 2,038 கன மீட்டர்தான் என்பதைக் கணக்கில்கொண்டே மாநகரம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். சில சிற்றோடைகளின் வெள்ளம் கடத்தும் திறனை மேம்படுத்தச் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், அடையாறின் வெள்ளம் கடத்தும் திறனை அதிகப்படுத்த எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
நகரமயமாதல் என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். வளர்ச்சி என்றால், கட்டுமானம் செய்யப்பட்ட பரப்பின் அளவு அதிகரிப்பது. அதன் பொருள் அதிகமான மழைநீர் வெள்ளமாக உருவெடுக்கும் என்பதே. அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் இதற்கு மேலும் செய்யப்படும் எந்தவொரு நகர்மயமாக்க நடவடிக்கையும் ‘அடையாறை வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும்’.
பரந்தூர் அமைந்துள்ள 500 சதுர கி.மீ. பரப்பு கொண்ட அடையாறின் தென்மேற்குப் பகுதியிலிருந்துதான், 2015இல் 3,000 கன மீட்டர் வெள்ளம் பெருக்கெடுத்து அடையாறை மூழ்கடித்தது. பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 4,500 ஏக்கர் கட்டுமானங்களால் மூடப்படுகிறது என்று வைத்துக்கொண்டால்கூட மணிக்கு 70 மி.மீ. என்ற அதிகத் தீவிரமற்ற மழையின் மூலம், நொடிக்கு 364 கன மீட்டர் நீர் திரளும். அதாவது 2015இல் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேறிய நீரில் பாதி அளவு கட்டப்படவுள்ள விமான நிலையத்திலிருந்து வெளியேறும்.
பரந்தூர்-சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள 4,500 ஏக்கர் நிலத்தில் 90% நஞ்சை நிலங்களும், நீர்நிலைகளும் புறம்போக்கு (பொது) நிலங்களாக இருப்பதை வரைபடங்கள் மூலம் அறியலாம். இப்பகுதியில், விமான நிலையம் அமைப்பது என்பது கட்டுமானப் பரப்பை அதிகரிப்பதே. அதாவது, பெய்யும் மழை மண்ணுக்குள் நுழைவதையும், நீர் சேமித்து வைக்கப்படும் பரப்பையும் குறைக்கும் என்றே அர்த்தம்.
பேரழிவை வரவேற்கலாமா?: இதுபோன்ற வளர்ச்சி நடவடிக்கைகளின்போது, பிரச்சினைக்கான நவீன பொறியியல் தீர்வு என்பது திறன் மிகுந்த மழைநீர் வடிகால் கட்டமைப்பையும், மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளையும் திட்டப் பகுதியில் கட்டுவதாகும். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. மனிதர்களால் கட்டப்படும் அற்பமான மழைநீர் வடிகால்கள், இயற்கையாக உருவான மழைநீர் சேமிப்புப் பகுதிகளான சதுப்புநிலத்திற்கு இணையானவை ஆகாது.
மேலும், மழைநீர் வடிகால்களின் திறன், அவை வெளியேற்றும் மழைநீரைத் தாங்கிக்கொள்வதற்கு ஆற்றுக்கு உள்ள திறனைச் சார்ந்தே அமையும். 2015 நமக்குக் காட்டியதுபோல, இயற்கை வரையறுத்துள்ள எல்லைகளை மீறி சென்னை வளர்ந்துவிட்டது.
இங்கே புதிய கட்டுமான வளர்ச்சிக்கான வாய்ப்பு இனி இல்லை. சுற்றுச்சூழல்-வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னையைக் காக்க, அதன் தாங்கும் தன்மையை நீடித்திருக்கச் செய்ய, சென்னையைச் சுருக்குவது வேண்டுமானால் ஒரு தீர்வாக இருக்கலாம்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்த கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய பேரழிவுகள் வரப்போவதற்கான வெறும் முன்னறிவிப்பாக மட்டுமே இருக்கின்றன; உண்மையான பேரழிவு இனிதான் அரங்கேறவிருக்கிறது! அந்தப் பேரழிவை, கட்டுமான வளர்ச்சி நடவடிக்கைகளால் நாமே வரவேற்கக் கூடாது.
தமிழில்: சி.மதிவாணன்
- நித்தியானந்த் ஜெயராமன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: nity682@gmail.com