

சென்னை: சுற்றுப்புற காற்றை தூய்மைப்படுத்தும் கருவியை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இது வடிகட்டி பயன்படுத்தப்படாத, அளவிடக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய, அறிவுப்பூர்வமாக செயல்படக் கூடிய கருவியாக உள்ளது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகலாவிய அளவில் காற்றுமாசுபாடு அதிகமுள்ள முதல் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாடு மெதுவாக மக்களைக் கொல்லும் பிரச்சினைகளும் ஒன்றாகும். மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட காற்று மாசுபாட்டு அளவுக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வணிகரீதியிலான, அளக்கக்கூடிய, சிக்கனமான, நீடித்த தொழில்நுட்பம் அவசியமாகிறது.
இதற்காக சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஏபிசிடிஇ கண்டுபிடிப்பு மையம், உமெண்டஸ் டெக்னாலஜி இந்தியா (யுடிஐபிஎல்) நிறுவனத்துடன் கடந்த 2020-ம் ஆண்டில் கைகோத்து, சுற்றுப் புற காற்று சுத்திகரிப்பு அமைப்பை உருவாக்க தஞ்சாவூரில் ஒரு சிறப்பு மையத்தை அமைத்தது.
அங்கு சுற்றுப்புற காற்றை தூய்மைப்படுத்தும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அது நிலையாகவும், தேவைக்கேற்ப எடுத்துச் செல்லக் கூடியதாகவும், மாசுபாட்டை அளவிடக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வைக்கப்படும் பகுதியில் உள்ள காற்றின் தரத்துக்கு ஏற்ப தன்னை தானாகவே தகவமைத்துக் கொண்டு, வெளியேற்றும் தூய காற்றின் தரம் குறையாத வகையில் செயல்படுகிறது. மேலும் இந்த கருவி சிறியதாகவும், அதிக பரப்பளவு இடத்துக்கும் ஏற்றதாகவும் உள்ளது.
தஞ்சாவூர் மற்றும் குர்கான் பகுதிகளில் இந்த கருவியை இயக்கி பரிசோதித்ததில் இது காற்றில் உள்ள கேடுவிளைவிக்கக் கூடிய நுண்துகள்களை 75 சதவீதம்
வரை நீக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த கருவியை மேலும் காற்றுமாசுபாடு நிறைந்த பகுதிகளில் வைத்து பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள சாஸ்த்ராவும், யுடிஐபிஎல் நிறுவனமும் திட்டமிட்டுள்ளன. இது காற்றுமாசு நிறைந்த பகுதிகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்ரமணியம் கூறும்போது, “இது டெல்லி போன்ற பல்வேறு பெரு நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ள காற்று மாசுபாட்டை போக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவுவதாக இருக்கலாம்” என்று கூறினார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.