புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை விரைவில் முதல்வர் தாக்கல் செய்வார்: செல்வம் தகவல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: விரைவில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவிப்போம் என்றும், புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார் என்றும் அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: "2022 - 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று நமது நாட்டின் 75வது சுதந்திர அமுதப் பெருவிழா தொடர்ந்து புதுச்சேரியில் சிறப்பாக கொண்டாடுவதன் காரணமாக நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவிப்போம். புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைத்துவிடும். முதல்வர் கேட்ட கூடுதல் நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு என்பது சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

தமிழகம், புதுச்சேரி பேரவைகள், நாடாளுமன்றத்திலும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தி முடித்த பின்னர் தள்ளி வைத்துள்ளனர். இதே முறையைத் தான் புதுச்சேரியிலும் பின்பற்றுகிறோம். டெல்லியில் நடைபெற உள்ள அமுதப் பெருவிழா நிகழ்வில் நமது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொள்கின்றனர். இதற்காக அவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர்.

புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஒப்புதல் மத்திய அரசு வழங்கிவிட்டது. தொடர்ந்து திட்ட வரையறை கேட்டுள்ளனர். அதனை தயார் செய்ய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

அவர்கள் வரும் 15 நாட்களுக்குள் திட்ட வரைவை வழங்கியதும், அதனை மத்திய அரசிடம் வழங்கி, புதிய வளாகம் கட்டமைக்க அனுமதி பெறப்படும்" என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in