

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் உயர்மட்டப் பாதைக்காக, சென்னை நந்தம்பாக்கம் அருகே அடையாறு ஆற்றை ஒட்டி தூண்கள் அமைக்க ஆரம்பக்கட்டப் பணி தொடங்கிஉள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லூர்(47 கி.மீ.) வரை 5-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த வழித்தடத்தில் 41.2 கி.மீ. உயர்மட்டப் பாதையாகவும், 5.8 கி.மீ. சுரங்கப் பாதையாகவும் அமையவுள்ளது.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி-மவுன்ட் சாலையில், முகலிவாக்கம்-மணப்பாக்கம் இடையே ராமாபுரம் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்படவுள்ளது. மேலும், உயர்மட்டப் பாதையில் மெட்ரோரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.
வலுவான அடித்தளம்
ராமாபுரம் - மணப்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதைக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முடிந்ததால், தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, 5 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இப்பாதையில், 9 தூண்கள் கட்டுமானப்பணி பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர, சென்னை நந்தம்பாக்கம் அருகே அடையாறுஆற்றை ஒட்டி தூண்கள் அமைக்கஆரம்பக்கட்டப் பணி (வலுவானஅடித்தளம் அமைக்கும் பணி) தொடங்கி உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, "நந்தம்பாக்கம் அருகே அடையாறு ஆற்றை ஒட்டி உயர்மட்டப் பாதைக்கான தூண்கள் அமைப்பதற்காக, ஆரம்பக்கட்டப் பணி தொடங்கிஉள்ளது. 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துஉயர்மட்டப் பாதையிலும் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும்பணி தொடங்கி உள்ளது" என்றார்.
மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 42 நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும், 6 நிலையங்கள் சுரங்கப் பாதையிலும் அமையஉள்ளன.