Published : 09 Aug 2022 06:47 PM
Last Updated : 09 Aug 2022 06:47 PM

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித் துறை வழக்குகள்: தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

சென்னை:வருமான வரி, செல்வ வரி தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித் துறை தாக்கல் செயதிருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1995-ம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறி, அந்த தொகையை, 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான, ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இந்த செலவை, 12 எம்.பி., எம்எல்ஏக்களும் சேர்ந்து 57 லட்ச ரூபாயை செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, பழைய உத்தரவை ரத்து செய்துவிட்டு, புதிதாக மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை ஆணையர் உத்தரவிட்டார் .

அதன்பின்னர் கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தியபோது, ஜெயலலிதா தான் செலவு செய்தார் என தீர்மானித்து உத்தரவு பிறப்பித்தார். அதை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீப்பாயம் ரத்து செய்தது. இதேபோல சுதாகரன் திருமண நிச்சயதார்த்தத்தின்போது 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொடுக்கப்பட்டது, ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்கப்பட்டது. இதையும் வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

1997-98-இல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, ஆவணங்களின் அடிப்படையில் அசையும் சொத்துகள் 4 கோடி ரூபாய் என வருமான வரித் துறை தீர்மானித்தது. இதிலும் ஜெயலலிதா மனுவை ஏற்று, ஆணையர் உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து, வருமான வரித் துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டில் மூன்று வழக்குகளை தொடந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016-ல் ஜெயலலிதா இறந்துவிட்டதால், இந்த மூன்று வழக்குகள் குறித்து அவரது சட்டபூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x