Published : 09 Aug 2022 06:55 AM
Last Updated : 09 Aug 2022 06:55 AM

தூத்துக்குடி | ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு: அகழாய்வில் வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்தன

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழியில் காணப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் (வட்டமிடப்பட்டுஉள்ளது) மற்றும் வெண்கல, இரும்பு பொருட்கள்.

தூத்துக்குடி/திருப்புவனம்: ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியின்போது தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் தங்கத்தாலான காதணி கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் தங்கத்தால் செய்யப்பட்ட 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.

வெண்கல ஜாடி ஒன்றும் இருந்தது. அந்த ஜாடியைச் சுற்றி 5 இடங்களில் கொக்கு, வாத்து போன்ற பறவைகள் நீர் அருந்துவதுபோல் அலங்காரங்கள் இருந்தன. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன 2 வடிகட்டி, 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கட்டான் உள்ளிட்ட 20 இரும்பு பொருட்களும் இருந்தன.

1902-ல் ஆங்கிலேய அதிகாரியான அலெக்சாண்டர் ரியா இங்கு அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. 120 ஆண்டுகளுக்கு பிறகு அதுபோல் மீண்டும் தங்க நெற்றிப்பட்டயம் கிடைத்துள்ளது.

தங்க நெற்றிப்பட்டயம்.

கீழடியில்..

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் ஒரே முதுமக்கள் தாழியில் 74 சூதுபவளங்கள் (அரிய வகை கல்) கண்டெடுக்கப்பட்டன.

கீழடி அருகே கொந்தகை பகுதி ஈமக்காடு என்பதால், அங்கு தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

கொந்தகையில் முதன்முறையாக ஒரே முதுமக்கள் தாழியில் 74 சூதுபவளங்கள், ஒரு செப்புத் துண்டு கிடைத்தது. சூதுபவளம் ஓர் அரியவகை கல் ஆகும். பழங்காலத்தில் இந்தக் கல் மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டது. இந்த வகை கற்களால் தயாரிக்கப்பட்ட அணிகலன்களை மன்னர்கள், அரசின் முக்கிய பிரமுகர்கள், செல்வந்தர்கள் அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களுடன் அணிகலன்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் பழங்காலத் தமிழர்களிடம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x