விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவல் துறையினருக்கு ஜாமீன்

மரணமடைந்த விசாரணைக் கைதி விக்னேஷ்
மரணமடைந்த விசாரணைக் கைதி விக்னேஷ்
Updated on
1 min read

சென்னை:காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், 90 நாட்கள் கடந்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், வழக்கில் கைதான காவல் துறையினர் 6 பேருக்கு சட்டபூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.

சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த சிபிசிஐடி, போலீசார், தலைமை செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் 6 பேரும் ஜாமீன் கோரி ஏற்கெனவே இரண்டு முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 7 மற்றும் ஆகஸ்ட் 2-ம் தேதிகளில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள் தரப்பில், "இந்த வழக்கில், மே 7-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாட்களை கடந்தும், காவல் துறை விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால், தங்களுக்கு சட்டபூர்வ ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 6 பேருக்கும் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in