

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் ஒரு மாதக் குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர்.
சென்னையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சினிமா குணச்சித்திர நடிகரான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரைக்கு நேற்று பிற்பகல் காரில் வந்துகொண்டு இருந்தார். மேலூரை அடுத்த அய்யாபட்டி அருகே வந்தபோது, மதுரையைச் சேர்ந்த உஸ்மான் ஹக்கீம் என்பவர் ஓட்டிச் சென்ற கார் கொட்டாம்பட்டி நோக்கி எதிர்புறத்தில் சென்றுகொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக உஸ்மான் ஹக்கீம் சென்ற கார் டயர் வெடித்து எதிரே வந்த செந்தில்குமாரின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உஸ்மான் ஹக்கீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒரு மாதக் குழந்தை, செந்தில்குமாரின் மகள் சாய்தென்றல்(8), மகன் சாய்கவின்(7) ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை, மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
செந்தில்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி, உஸ்மான் ஹக்கீமின் மனைவி ஆயிஷா ரிக்விகா, அவரது மகன் இப்ராகிம் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.