திருத்தணி | பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார், ஊராட்சி தலைவர் வீடு உட்பட ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் இடித்து அகற்றம்: வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருத்தணி: திருவாலங்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் மற்றும் தொழுதாவூர் ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் கட்டியிருந்த வீடு உள்ளிட்ட கட்டிடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள தொழுதாவூரில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைக்குட்டை என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த, பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயா, திமுகவின் மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் தொழுதாவூர் ஊராட்சித் தலைவருமான அருள்முருகன் உட்பட 7 பேர் வீடுகள், கடை என 9 கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
அதனை அகற்ற வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த ரேணுகா, கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் வெள்ளைக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கடந்த ஆண்டு இறுதியில், 2 முறை வருவாய்த் துறையினர் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.
இதற்கு எதிராக அருள்முருகன் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த ஏப்ரலில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள், தமிழ்நாடு நில ஆக்ரமணச்சட்டம் 10 அ 1-ன்படி அரசிடம் மேல்முறையீடு செய்தனர். அதனை கடந்த மாதம் அரசு நிராகரித்தது.
இதையடுத்து, நேற்று திருத்தணி கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகள், கடை ஆகியவற்றை பொக்லைன் மூலம் அகற்றினர். இதன்படி 6 வீடுகளை முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக, குட்டை நிலத்தில் கட்டப்பட்டிருந்த நியாயவிலைக் கடை, இ- சேவை கட்டிடம், நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களையும் அதிகாரிகள் அகற்றினர்.
காலை முதல், மாலை வரை நீடித்த இப்பணியில், பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் அருணோதயாவின் 2 வீடுகளில் ஒரு வீடு மட்டுமே அகற்றப்பட்டது. மற்றொன்றையும் அகற்ற வேண்டும் எனக் கூறி, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அவர்களிடம் பேசிய வருவாய்த் துறை அதிகாரிகள், இருட்டாக இருப்பதால் மற்றொரு வீட்டை நாளை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
