

சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்படுள்ளது. ரூ.210 முதல் ரூ.390 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமைப் பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமைப் பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள முடியும்.
இதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
80 கிலோ வரையிலான பார்சல்களுக்கு தினசரி திருச்சி முதல் சென்னை வரை ரூ.210, மதுரை முதல் சென்னை வரை ரூ.300, நெல்லை முதல் சென்னை வரை ரூ.390, தூத்துக்குடி முதல் சென்னை வரை ரூ.390, செங்கோட்டை முதல் சென்னை வரை ரூ.390, கோவை முதல் சென்னை வரை ரூ.330, ஒசூர் முதல் சென்னை வரை ரூ.210 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்சல்களை அனுப்ப சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விரைவுப் போக்குவரத்து கழக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.