

சேலம்: ஆடிப்பெருக்கு பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகையை ஒட்டி, பூக்களின் தேவை நேற்று அதிகரித்திருந்தது. இதனால், சேலம் வஉசி மார்க்கெட்டில் பூக்களை வாங்கிச் செல்வதற்கு, மக்கள் திரண்டு வந்திருந்தனர். இதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, குண்டு மல்லி பூ கிலோ ரூ.1,000 ஆக உயர்ந்திருந்தது.
பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஆடிப்பெருக்கு வழிபாட்டுக்காக, பூக்களின் தேவை அதிகரித்திருந்த நிலையில், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது. சில தினங்களுக்கு முன்னர் வரை கிலோ ரூ.500-க்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
முல்லை கிலோ ரூ.600, ஜாதி மல்லி ரூ.400, காகட்டான் ரூ.360, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.180, செவ்வரளி ரூ.200, நந்தியாவட்டம் ரூ.180 என விற்பனையானது’ என்றனர்.