Published : 01 Aug 2022 07:52 AM
Last Updated : 01 Aug 2022 07:52 AM
சென்னை: கட்டணத்தை உயர்த்தாமல் வருவாய் ஈட்டும் முயற்சியின் கீழ், தெற்கு ரயில்வேயில் இணையவழி ஏலம் மூலமாக 64 ஒப்பந்தங்கள் வழங்கி, ரூ.34.60 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கட்டணத்தை உயர்த்தாமல், ரயில்வே இடங்கள், ரயில்வே சொத்துகளை வாடகை, குத்தகைக்கு விடுவதன் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாகஈடுபட்டுள்ளது.
அதன்படி,வாகன நிறுத்தம், ரயில்வே வளாகத்தில் விளம்பர பதாகை வைத்தல், ரயில் நிலையத்தில் கட்டணகழிப்பறை, குளிர்சாதன வசதிகொண்ட காத்திருப்போர் அறை ஆகியவற்றை குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் வருவாய்ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்களில் 64 வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.34.60 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்குரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கட்டணத்தை உயர்த்தாமல் வருவாய் ஈட்டும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில், இணையவழி ஏலம் கடந்த ஜூன்25-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலமாக கடந்த 29-ம் தேதி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 6 ரயில்வே கோட்டங்களில் ரூ.34.60 கோடி மதிப்பில் 64 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 18 வாகன நிறுத்த ஒப்பந்தங்கள், விளம்பரம் தொடர்பான 21 ஒப்பந்தங்கள், ரயில்களில் பார்சல் வைக்கும் இடத்துக்கான 19 குத்தகை ஒப்பந்தங்கள், ரயில் நிலையங்களில் குளிர்சாதன காத்திருப்போர் அறை, கட்டண கழிப்பறைகள் ஆகியவற்றை குத்தகைக்கு விடுதல் தொடர்பாக தலா 3 ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும்.
கோட்டம் வாரியாக அதிகபட்சமாக சேலத்தில் ரூ.21 கோடியில் 28 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் ரூ.6.61 கோடியில் 8ஒப்பந்தங்கள், மதுரை கோட்டத்தில் ரூ.2.68 கோடியில் 14 ஒப்பந்தங்கள், திருச்சியில் ரூ.1.72 கோடியில் 7 ஒப்பந்தங்கள், திருவனந்தபுரத்தில் ரூ.1.38 கோடியில் 6 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் 3,108 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக, கட்டணமில்லா வருவாய் மற்றும் வர்த்தக வருமானம் ஈட்ட ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாகன நிறுத்தம், ரயில்வே வளாகத்தில் விளம்பர பதாகை வைத்தல், கட்டண கழிப்பறை மூலம் வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT