Published : 31 Jul 2022 05:18 AM
Last Updated : 31 Jul 2022 05:18 AM
சென்னை: கொள்கை அடிப்படையில் அமைந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் ஓர் ஊடகம் சார்பில் நேற்று நடைபெற்ற ‘இந்தியா-75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்று, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:
கேரள மக்கள் தமிழ் சினிமா மற்றும் இசைக்கு பெரும் ரசிகர்கள். அதேபோல, தமிழக முதல்வருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாக தெரிகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழகம் எப்படி பார்க்கிறது?
எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பதுபோல, ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்குத் தெரியும். அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போன்ற ஒரு முதல்வர் நமது மாநிலத்துக்கு இல்லையே என்று தமிழக மக்கள் ஏக்கத்துடன் இருந்தார்கள். அதை ஊடகங்கள்கூட எழுதின. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதாரணமாக, உங்கள் முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகளைத்தான் நான் கையில் எடுத்தேன்.
குறிப்பாக, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியை, உங்கள் மாநில முதல்வர் பினராயி விஜயன் வழிகாட்டுதல்படிதான் மேற்கொண்டேன். இது எனக்கு பெரிய பெருமை.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுகவின் கூட்டணிக் கட்சி. இந்த நட்பு ஆட்சியிலும், கட்சியிலும் எப்படி இருக்கிறது?
இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. அது கொள்கைக் கூட்டணி; லட்சியக் கூட்டணி. எனவே, நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்.
திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக சொல்கிறார்கள். நேரிலும் சில பிரச்சினைகளைத் தெரிவிக்கிறார்கள். தங்களது கருத்துகளைக் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாகத் தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.
அதையும் தாண்டி, பல கருத்துகளையும், ஆட்சியில் இருக்கும் சில குறைபாடுகளையும் அவர்களது பத்திரிகை மூலம் சுட்டிக் காட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் உடனுக்குடன் சரிசெய்கிறோம். எங்களது கொள்கைக் கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இது தொடரும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `ஒரே நாடு, ஒரே மொழி' என்று கூறியபோது, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பின்னர், பிரதமர் மோடி பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை ஏற்று அறிக்கை வெளியிட்டார். ஒரு தேசம், ஒரு மொழி என்று பேசுவது மாநில மொழிகளுக்கு அச்சுறுத்தலானதா?
ஆமாம். இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழும் நாடாகும். ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி உருவானால், மற்ற மொழிகள் பாதிக்கப்படும். காலப்போக்கில் அழிந்துவிடும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மத்தியப் புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கின்றன. போராடிப் பெற்ற சுதந்திரத்தை நாம் இழந்து வருகிறோமா?
இவை அனைத்தும் எதேச்சதிகாரப் போக்குகள். போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகள் அனைத்தையும் பறிப்பது மிகத் தவறானது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT