“பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடப்பது தமிழக அரசுக்கு அவமானம்” - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர் | கோப்புப் படம்.
இயக்குநர் அமீர் | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: "பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடப்பது என்பது மாநில அரசுக்கு அவமானம். திமுக, அதிமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே நிலைதான்" என்று திரைப்பட இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திரைப்பட இயக்குநர் அமீர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பாஜக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து மக்களுக்கான ஆட்சி மத்தியில் ஒரு நாளும் நடக்கவில்லை. மக்களுக்கு எதிராக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சி தான் தேசம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இனிமேலும் அவர்கள் அந்த பாதையில் தான் பயணிப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆளுநர்களை வைத்து ஆட்சி மாற்றம் செய்வது, இல்லையென்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரத்துக்கு வருவது, தனதுக்கு எதிரானவர்கள் மீது வழக்கு போட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்வது அல்லது ஆளையே காலி செய்வது என்பதைத்தான் பாஜகவினர் கடைபிடித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க பாசிச ஆட்சித்தான் நடக்கிறது. அது என்றைக்கும் மாறப்போவதில்லை. உலக அரங்கில் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் பெயரில் நடைபெறும் கொடுங்கோலாட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. மக்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் தேர்தலில் இவையெல்லாம் நிச்சயம் எதிரொலிக்கும். இலங்கையின் தாக்கம் இந்தியாவுக்கு வர ரொம்ப காலம் இல்லை.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடப்பது என்பது மாநில அரசுக்கு அவமானம். திமுக, அதிமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே நிலைதான். இதனை பிரித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. பள்ளி மாணவிகளின் தொடர் மரணங்களுக்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய தலைகுனிவாகத்தான் மாறும்.

பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கையை விட போராட்டக்காரர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை அதிகமாக உள்ளது. இது வருத்தத்திற்குரியது’’என்றார். பேட்டியின்போது இயக்குநர் கருபழனியப்பன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in