புதுக்கோட்டையில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கியது; ஆக.7 வரை நடக்கிறது

புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தக விழாவைத் தொடங்கிவைத்து மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகம் வாங்குவதற்கு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தக விழாவைத் தொடங்கிவைத்து மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகம் வாங்குவதற்கு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
Updated on
2 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 5-வது புத்தகத் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. இதனை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 5-வது புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 100 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர், புத்தகம் வாங்குவதற்கு முதல்கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி அவர் பேசியதாவது:

''புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அகிலன், அழ.வள்ளியப்பா ஆகியோரது நூற்றாண்டு விழாவின்போது புத்தகத் திருவிழா நடத்தப்படுவது சிறப்பானது. கரோனா பரவலினால் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு எழுச்சியோடு நடைபெறுகிறது. தன்னுடைய சிந்தனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள புத்தகம் வாசிப்பு முக்கியமானது. தமிழகத்தில் வாசிப்பை நேசித்ததோடு, புத்தகம் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரே தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.

அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகவிழாவை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகவிழாவை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

அதன் வழியாக, தனக்கு பொன்னாடைகளை தரவேண்டாம் என கூறி தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று கூறியவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். தனக்கு வரும் புத்தகங்களை பிற நூலகங்களுக்கு கொடுத்து வருகிறார். புத்தகம் வாசிப்பு குறித்து தந்தை ஒரு கோணத்தில் பார்த்தார் என்றார், மகன் மற்றொரு கோணத்தில் பார்க்கிறார். இவ்வாறு புத்தகத்தின் மகத்துவத்தை புரிந்ததால்தான் மாவட்டந்தோறும் தமிழக அரசு புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது.

புத்தகங்களை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மற்றும் அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள்
புத்தகங்களை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மற்றும் அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள்

நினைவு ஆற்றல், அறிவு ஆற்றலை வளர்த்துக்கொள்ள புத்தக வாசிப்பு அவசியமானது. படித்ததை ஆழமாக பதிய வைத்துக் கொண்டால்தான் எதிர்காலத்துக்கு நல்லது. எனவே, மாணவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 மணி நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்'' என்றார்.

திறப்பு விழாவில் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை, நகராட்சித் தலைவர் திலவதி செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in