Published : 29 Jul 2022 07:24 AM
Last Updated : 29 Jul 2022 07:24 AM

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கு அம்மை ஆய்வக கட்டமைப்பு குறித்து ஆய்வு; செஸ் வீரர்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்கள் மாமல்லபுரம் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கடந்த 27-ம் தேதிஅனுமதி அளித்துள்ளது.

குரங்கு அம்மையை கண்டறிய தோல், புண், சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால், அதற்கான ஆய்வக கட்டமைப்புகள் குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த மே 6-ம் தேதி இங்கிலாந்தில் முதன்முதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. இதையடுத்து, முதல்வர் அறிவுறுத்தியபடி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

77 நாடுகளில் 20,638 பேருக்குகுரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த77 நாடுகளின் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வேறு நாடுகள் வழியாக தமிழகம் வருவோரையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேரளா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 4 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்த 2 குழந்தைகளின் முகத்தில் சிறு கொப்புளம் இருந்தன.

புனே ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதித்ததில், அது குரங்கு அம்மை இல்லை என்பது உறுதியானது. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி எதுவும் இல்லை.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள வீரர்கள்அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியுள்ள 21 விடுதிகளிலும் மருத்துவ வசதிகள் உள்ளன. அதில் 8 விடுதிகளில் அதிக வசதிகளுடன் கூடிய மருத்துவ முகாம் 24 மணிநேரமும் செயல்படும்.

விளையாட்டு அரங்கத்தில் பல்துறை மருத்துவர்கள் அடங்கிய முகாம்களும் உள்ளன. இதற்காக 30 ஆம்புலன்ஸ்களுடன், 1,000 மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து விடுதிகளிலும் யோகா பயிற்சி அளிக்கும் மருத்துவர்களும் உள்ளனர்.

முதல்முறையாக, செஸ் வீரர்களுக்கு முதல்வரின் காப்பீட்டுதிட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் உள்ள 13 மருத்துவமனைகளில் வீரர்கள் இந்த அட்டையை காண்பித்து ரூ.2 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைபெறலாம். அதற்கும் மேல் மருத்துவசெலவு வந்தாலும், தமிழக அரசுஏற்கும். செஸ் போட்டி கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் காவேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x