Published : 29 Jul 2022 07:10 AM
Last Updated : 29 Jul 2022 07:10 AM

செஸ் ஒலிம்பியாட் 2022 | மாமல்லபுரத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: வடக்கு மண்டல டிஐஜி சத்யபிரியா தகவல்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி.சத்ய பிரியா ஆய்வு மே ற்கொண்டார்.

மாமல்லபுரம்/மறைமலை நகர்: மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதால், மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

ஆக. 10-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளதால் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், வாகன நிறுத்துமிடம் மற்றும் போட்டி அரங்க வளாகத்துக்குள் செல்வதற்கு முன்பு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர் என அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் வடக்கு மண்டல டிஐஜி.சத்யபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விளையாட்டு வீரர்கள் வரும் பேருந்துகள் எந்தப் பகுதியில் நிறுத்தப்படுகின்றன, வீரர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பார்வையாளர்களை எவ்வாறு சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் வீரர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிகளை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் போலீஸார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போட்டி அரங்க வளாகத்துக்கு வரும் நபர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

72 பேருந்துகள் மூலம்..

செஸ் போட்டியில் பங்கேற்க வந்த, 187 நாடுகளை சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு, இவ்வீரர்கள் 72 பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

மாமல்லபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் சென்னையில் நடைபெற்ற செஸ்
ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு அழைத்து செல்லப்பட்ட வீரர்கள்.

இந்தியா சார்பில் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் தமிழக பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒரே மாதிரியான சேலை அணிந்து சென்றனர். இந்திய வீரர்களும் ஒரே வண்ணத்திலான ஆடைகள் அணிந்து சென்றனர். இதேபோல், வெளிநாட்டு வீரர்களும் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். வீரர்கள் பயணித்த பேருந்துகளில் பாதுகாப்புக்காக 2 போலீஸார் உடன் சென்றனர்.

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையோரங்களில் அமைந்துள்ள நடைபாதை மற்றும் தள்ளு வண்டி கடைகள் நேற்று மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வெண்ணைய் உருண்டை பாறை உட்பட கலைச்சின்ன வளாகங்களில் சிறு வியாபாரிகள் அமைத்திருந்த தின்பண்டம் மற்றும் உணவு பொருட்கள் கடைகளும் அகற்றப்பட்டன.

விழிப்புணர்வு பேரணி

செஸ் போட்டியை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மறைமலை நகர் நகராட்சி சார்பில், 100-க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்ட ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நகரமன்ற தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ வரலட்சுமி கலந்து கொண்டு செஸ் வண்ணம் கொண்ட பலூன்களை பறக்கவிட்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

மறைமலை நகரில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி
ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பாவேந்தர் பிரதான சாலையில் தொடங்கி, மறைமலை அடிகளார் சாலை, எம்ஜிஆர் சாலை, அண்ணா சாலை வழியாக 3 கிமீ தூரம் சென்று மீண்டும் பாவேந்தர் சாலையில் பேரணி முடிவடைந்தது. மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கிய சாலைகளில் செஸ் சதுரங்க விளையாட்டு சின்னங்கள் மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத் தலைவர் சித்ரா ஆணையாளர் லஷ்மி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போட்டி அரங்க வளாகத்துக்கு வரும் நபர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x