

ஊத்தங்கரை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்னர் பெய்துள்ள மழையால், இயற்கை முறை பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, செம்படமுத்தூர், மகாராஜகடை, வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, தாசிரிப்பள்ளி, அத்திகுண்டா, செம்படமுத்தூர், வரட்டனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியில் பரவலாக விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு ஏக்கரில் ஆயிரம் செடிகளை நட்டு வளர்க்கின்றனர்.
இந்நிலையில், ஊத்தங்கரை பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தாமல், ரெட்லேடி வகை பப்பாளி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஊத்தங்கரையை அடுத்த கெங்கபிராம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊத்தங்கரை பகுதியில் நிலவிய கடும் வறட்சியால் விவசாயிகள் பல்வேறு வகையில் வருவாய் இழப்புகளை சந்தித்தனர். தற்போது, ஊத்தங்கரை பகுதியில் பெய்யும் மழையால் விவசாயிகள் பலர் மீண்டும் விவசாயப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் பலர் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பப்பாளியில் ரெட்லேடி, ரெட்குயின், ரெட்ராயில் உள்ளிட்ட பலவகைகள் உள்ளன. இதில், ரெட் லேடி வகை பப்பாளி அதிக சுவை கொண்டதாகும். 6 மாதங்களில் மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் வாரத்துக்கு 2 டன் பப்பாளி அறுவடை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ பப்பாளி தரத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனையாகிறது. ஊத்தங்கரை பகுதிகளில் விளையும் பப்பாளி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இதனால், விவசாயிகளுக்கு பப்பாளி சாகுபடி கைகொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.