

சென்னை: சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் சுரங்க மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ரூ.63 ஆயிரத்து 200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ., மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் பூந்தமல்லி பைபாஸ்-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் பாதை மற்றும் நிலையங்கள் கட்டுமானபணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, 7 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில், கோடம்பாக்கம் - நந்தனம் மெட்ரோ ரயில்நிலையங்கள் இடையே தியாகராய நகர் பனகல் பூங்காவில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தியாகராய நகரின் மையப்பகுதியில் பனகல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல மரங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் அமைச்சகமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியதையொட்டி, இங்கு மெட்ரோ ரயில் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, இங்குள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. மேலும், கட்டுமானப் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, ராட்சத கிரேன்கள், கட்டுமானப் பொருட்கள், சாதனங்கள் அனைத்தும் பனகல் பூங்காவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன,
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: பனகல் பூங்காவில் மெட்ரோ ரயில் பாதை பணிக்காக, 133 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும், மெட்ரோநிர்வாகத்தால் 1,596 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும்.
அதேபோல, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக, ரூ.22.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை மாறாமல் மெட்ரோ ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.