

சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக இளைஞர்களை கட்சியில் இணைப்பது, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவது உள்ளிட்டவற்றின் மூலம் கட்சியை வளர்க்கும் பணிகளில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 60 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:
'மோடி கபடி லீக்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். 5 ஆயிரம் அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றன. 60 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிகள் தேசிய விளையாட்டு தினமான ஆக. 29-ம் தேதி தொடங்கி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி நிறைவடைய உள்ளது. இறுதிப் போட்டியை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். பரிசளிப்பு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம், 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அதேபோல், மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 லட்சம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.