

இடுக்கி மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தமிழக தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா, வண்ணப்புரம் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவ மனைகளில் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கை, கால், மூட்டுவலி, உடல் சோர்வு, சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் இடுக்கி, தொடுபுழா அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதில் 43 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜார்ஜ் டெங்குவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் பரவிவரும் டெங்குவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆட்சியர் கவுசிகன் தலைமையிலான அனைத்துத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு அச்சம் காரணமாக மூணாறு, மாட்டுப்பட்டி, ராஜாக் காடு பகுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், விடுதிகளைக் காலி செய்து விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இது குறித்து ‘தி இந்து’விடம் உத்தமபாளையம் தோட்ட தொழிலாளர்கள் பியூலாமேரி, சித்ரா ஆகியோர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்ட தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு தோட்ட வேலைகளுக்கு தினமும் பல ஆயிரம் பேர் ஜீப், வேன், பஸ்கள் மூலம் சென்று வருகிறோம். கடந்த 3 நாட்களாக இம்மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தொழிலாளர்கள் சிலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதனால் பலர் கேரளாவுக்கு வேலைக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே விவசாயப் பணிகளுக்குச் சென்று வருகின்றனர் என்றார்.