

கல்லட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஆந்திராவை சேர்ந்த பெண்ணை, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
கல்லட்டி மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி கட்டா வினிதா சவுத்ரி மாயமாகியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் புதுமந்து போலீஸார் மற்றும் உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உதகையில் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தண்ணீரில் மூழ்கிய பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.