Published : 16 Jul 2022 07:18 AM
Last Updated : 16 Jul 2022 07:18 AM
சென்னை: இளம் தலைமுறையினர் பத்திரிகை, புத்தகங்கள் போன்றவற்றை படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விஐடிவேந்தரும், தமிழியக்க நிறுவனருமான கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழியக்கம் சார்பில் மறைமலை அடிகளாரின் 147-வது பிறந்தநாள் விழா சென்னையில் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கவிஞர் முத்துலிங்கம் பங்கேற்று, மறைமலை அடிகளாரின் உருவப் படத்தை திறந்து வைத்து மாலைஅணிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கோ.விசுவநாதன் பேசியதாவது:
1916-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைதொடங்கினார். தமிழ் மொழிஇருக்கும் வரை மறைமலையடிகளாரை யாரும் மறக்கமுடியாது. அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் வழியில் 2018-ம் ஆண்டு தமிழியக்கம் தொடங்கப்பட்டு தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டாற்றி வருகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு தமிழ்மொழியின் தொன்மை தெரியவில்லை, இளைஞர்கள் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் பெயர் வைக்க வேண்டும். ஒருகுழந்தையின் பெயரை வைத்தேஅக்குழந்தையின் தாய் மொழியை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். இன்றைய இளம்தலைமுறையினர் பத்திரிகை, புத்தகங்களை அதிகம் படித்து தங்கள் அறிவு மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகின் பொது நூலாக அனைவரும் ஏற்றுக்கொண்டது நம்முடைய திருக்குறளைத் தான். 170 நாடுகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் நம் திருக்குறள் தான். திருக்குறளை பின்பற்றி நாம் வாழ்ந்தால் நம் சமுதாயமும் நாடும் முன்னேறி விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கக்கன் பேத்தியும், காவல் துறை இணை இயக்குநருமான ராஜேஸ்வரி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனா, விஜிபிகுழும இயக்குநர் வி.ஜி. சந்தோஷம், கவிஞர் வரலட்சுமி, சங்கர் நீதி மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT