Published : 15 Jul 2022 07:32 AM
Last Updated : 15 Jul 2022 07:32 AM

292 அரசு தொடக்கப் பள்ளியில் விரைவில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 292 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விரைவில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைவேளையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளில் பரிசோதனை முறையில் மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

சுயஉதவி குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மூலம் அரசு தொடக்கப் பள்ளிமாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்க வேண்டும்.அவர்கள், உணவு தயாரிக்கும்பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுஅனுபவத்துடன், பள்ளியில்இருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

காலை உணவானது அரிசி அல்லது சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் சிற்றுண்டிவழங்கப்படவேண்டும். அதற்கேற்ப சமையல் பணியை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும்.

இதற்கான அடுப்பு, சிலிண்டர்,பாத்திரங்கள் ஆகியவை சமூகநலத் துறை மூலம் வழங்கப்படும். மளிகை பொருட்கள், காய்கறிகளை உள்ளூர் சந்தையில் வாங்கிக்கொள்ளலாம். சத்தான சிற்றுண்டி வழங்க ஒரு குழந்தைக்கு தினசரி ரூ.8.25 வீதம் தற்காலிகமாக ஒதுக்கப்படுகிறது. காலை உணவு சமைக்கும் சுயஉதவி குழுவினர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்துக்கு முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 292 தொடக்கப் பள்ளிகளின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x