Published : 13 Jul 2022 07:03 AM
Last Updated : 13 Jul 2022 07:03 AM
சென்னை: பூங்கா பராமரிப்பில் தொடர்ந்து 3 முறைக்குமேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பூங்கா துறையின் சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றுன. இவற்றில் 571பூங்காக்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பூங்கா பராமரிப்புப் பணிகளில்காவலர், தூய்மைப் பணியாளர்மற்றும் தோட்டப் பராமரிப்பாளர்போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையைவிட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், தொடர்ந்து 3 முறைக்குமேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.500, கழிப்பறை பகுதிகளை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பூங்காவில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புல்தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 4 ஆயிரம் சதுர அடி வரையிலான பூங்காக்களில் ரூ.2,500-ம், 4 ஆயிரம் சதுரஅடிக்கு மேலான பூங்காக்களில் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பூங்கா துறையின் சார்பில் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் கடந்த 7-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 35,590 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள எண்ணிக்கையின்படி பணியாளர்கள் இல்லாத காரணத்துக்காக 18 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.28,090, பராமரிப்புப்பணிகளில் உள்ள குறைபாடுகளுக்காக 69 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 லட்சத்து 7,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT