Published : 13 Jul 2022 06:29 AM
Last Updated : 13 Jul 2022 06:29 AM

ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆடி மாதத்தை முன்னிட்டு முக்கிய அம்மன் கோயில்களான சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி, மாங்காடு காமாட்சி, திருவேற்காடு தேவி கருமாரி, காஞ்சிபுரம் காமாட்சி, பெரியபாளையம் பவானி, திருச்சி உறையூர் வெக்காளி, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி மற்றும் தஞ்சாவூர் புன்னைநல்லூர், இருக்கன்குடி, பண்ணாரி, சமயபுரம், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்கள் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 27 அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

கோயில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள், வாகன நிறுத்துமிடம் அமைத்து தரப்படும். கூழ் வார்க்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பக்தர்கள் நேர்த்திக் கடன் முடித்து சென்ற பின்பு கோயில் வளாகத்தை சுத்தமாக வைக்கவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரவும் கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் ஊழியர்கள்

ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் பக்தர்கள்வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக ஆடி மாத திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேஷ நாட்களான ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x