அதிமுக தலைமை அலுவலக மோதலுக்கு திமுக அரசு, ஓபிஎஸ்தான் பொறுப்பு: இபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலக மோதலுக்கு திமுக அரசு, ஓபிஎஸ்தான் பொறுப்பு: இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் 47 பேர், 2 போலீஸார் காயமடைந்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுகதொண்டர்களை இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாங்கள் புகார் கொடுத்தும் போலீஸார் முழு பாதுகாப்பு வழங்கவில்லை.

அலுவலகஆவணங்களை எல்லாம் சமூக விரோதிகள் அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அத்துமீறி கட்சி தலைமை அலுவலகத்துக்குள் ரவுடிகளுடன் நுழைந்து, கட்சி நிர்வாகிகளை தாக்கியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்ததாக்குதல் என்பது திமுக அரசும், ஓபிஎஸ்ஸும் இணைந்து போட்ட திட்டம். நீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்று, அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in