

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தமாகா, விசிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்றுமுன்தினம் காவேரிப் பட்டணம், கிருஷ்ணகிரியிலும், நேற்று பர்கூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் தமாகா வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி ஜெயப்பிரகாஷ், பர்கூர் ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஊத்தங்கரை கனியமுதன் ஆகி யோரை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது. இதுவரை ஆண்ட திராவிட கட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை. சாக்கடை கால்வாய் வசதி, மின்சார வசதி, பஸ் வசதி, முறையான பள்ளி கூட்டம் கிடையாது. எனவே ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இலவசம் எனக் கூறி பொதுமக்கள் வரிப்பணத்தை செலவு செய்கின்றனர்.
நாங்கள் 6 முகங்களாக இருந்தாலும், இந்த நாட்டை ஏறுமுகமாக மாற்றவே ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் முகங்கள் வேறாக இருந்தாலும், நேர்மை, நாணயம், நம்பகத்தன்மை, வெளிப்படை நிர்வாகம் போன்றவை எங்கள் நோக்கமாகும். எங்களை நம்புங்கள். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் நல்லாட்சி தருவோம். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களை வெற்றிபெற செய்தால், கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி, வாசனை திரவிய தொழிற்சாலை, எண்ணேகொல் புதூர் கால்வாய் திட்டம் செயல்படுத் துவோம். தேமுதிக தலைவர் விஜய காந்த் தலைமையில் ஊழலற்ற நல்லாட்சியை கொண்டு வருவோம். இந்த தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்பதை நீங்கள் அனை வருக்கும் உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.