

வேலூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பாஜக செயற்குழுக் கூட்டம், வேலூர் அடுத்த அரப்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கார்த்தியாயினி, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாதாரண கிராமத்தில் பிறந்து, அரசுப் பணியில் சேர்ந்து, பிறகு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தம் வாழ்நாளைச் செலவிட்டநம்வாழ்வாருக்கு `பாரத ரத்னா'விருது வழங்க வேண்டும் எனமத்திய அரசை வலியுறுத்தி, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது, மக்கள்அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டது, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கியது, உக்ரைன்-ரஷ்யா போரின்போது இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் பாதுகாப்பாக அழைத்து வந்தது போன்றவற்றுக்காக பிரதமருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னி பாதை திட்டத்தில், ராணுவத்தில் சேர இதுவரை9.50 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டம் மூலம் தற்போது ராணுவத்தில் உள்ளவர்களின் சராசரி வயதான 37 ஆண்டுகள் என்பது, எதிர்காலத்தில் 27-ஆக குறையும். இதுஅமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாகும்.
எனவே, அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்தியதற்காகவும், இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முக்கு வாய்ப்பு வழங்கியமைக்காகவும் மத்திய அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசுடன், மாநில திமுக அரசு ஒத்துழையாமையைக் கடைப்பிடித்து வருகிறது. ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், திமுக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுக்க முயற்சிப்பதுடன், மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி, மாநில அரசு மேற்கொண்டதாக ஏமாற்றி வருகிறது.
தமிழகம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக, அரசுபொதுத் தேர்வில், தமிழ் பாடத்திலேயே 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பது பெருத்த அவமானமாகும்.
தமிழகத்தில் தற்போது போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. தமிழக அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கத் தவறிவருகிறது. இதற்காக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.