ஓசூருக்கு என்ன செய்வீர்கள்?- வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பிய மக்கள்

ஓசூருக்கு என்ன செய்வீர்கள்?- வேட்பாளர்களிடம் கேள்வி எழுப்பிய மக்கள்
Updated on
1 min read

ஓசூர் மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகள் என்ன என்பதும், வாக்காளர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவீர்களா? எனக் கேட்டும் ஓசூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓசூர் மக்கள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் மக்கள் சங்க நிர்வாகிகள் பிரசாத், லட்சுமணன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஓசூரில் உள்ள வாக்காளர்கள் வேட்பாளர்களிடம் கேட்க உள்ள கேள்விகள், அடிப்படையான கோரிக்கைகளை ஓசூர் மக்கள் சங்கம் மூலம் தொகுத்துள்ளோம். இதனை அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உட்பட ஓசூர் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களிடம் அளித்துள்ளோம்.

இந்தியாவில் சிறந்த தொழில் நகரமாக ஓசூரை மாற்றிட, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மாடல் சிட்டி, சிறப்பு பொருளாதார மண்டலம், சிப்காட் -3, தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்கப்பட்டுள்ளது.

ஓசூர் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரி, வாய்க்கால்கள் சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பெங்களூரிலிருந்து வரும் கழிவு நீரால் விவசாயம் பாதிக் கப்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டும். மூக்கண்டப்பள்ளி, பத்தலப்பள்ளியில் உழவர் சந்தைகள் தொடங்க வேண்டும். ஓசூரில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. எனவே பல லட்சம் மரங்கள் நட்டு காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனப்பகுதியில் யானைகளுக்கு உணவு, நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ரயில் வசதி, சுற்றுப்புறத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பீர்களா? எனக்கேட்டு வாக்காளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து வேட்பாளர்களையும் ஒரே இடத்தில் வரவழைத்து வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in