

மதுரை: பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் அமிழ்தன், மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பராஜ், வெங்கசேடஷ், அருண் தமிழன், ஜெயமுருகன், அர்ச்சனா எச்.ராஜா உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் துணை ஆணையர் மோகன்ராஜை சந்தித்து மனு அளித்தனர்.
புகார் மனுவில், ''விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், ஒழுத்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சக்திவேல். இவர் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் நோக்கில் சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி பற்றியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை பேசியுள்ளார்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்தும் அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ளார். வெடிகுண்டு அல்லது பெட்ரோல் குண்டு வீசி இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து, வாட்ஸ்அப், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்து நானும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தோம். சக்திவேல் மட்டுமே தனி நபராக இது பற்றி முடிவெடுத்து பேசியதாக தெரியவில்லை.
அவருக்கு பின்னால் தேச விரோத அமைப்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரதமர், மாநிலத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் சக்திவேல் மற்றும் அவரை சார்ந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.