

சென்னை: "பொது நலன் கருதி தொடர்பற்ற பதிவுகளைப் ரீ-ட்வீட் செய்வதையும் தவர்க்கவும்" என்று சென்னை காவல் துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது நெட்டிசன்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டரில் ‘மாட்டுக் கறி’ என்ற புகைப்படத்துடன் ஒருவர் பதிவிட்டதற்கு, சென்னை காவல் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது’ என்று பின்னூட்டத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் துறை "அபுபக்கர், தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத் தேர்வினைக் குறித்தல்ல" என்று விளக்கம் அளித்து இருந்தனர். | விரிவாக வாசிக்க > ‘மாட்டுக் கறி’ பதிவும், சென்னை காவல் துறையின் ரியாக்ஷனும் - ட்விட்டரில் நடந்தது என்ன?
இந்நிலையில் "பொது நலன் தொடர்பற்ற பதிவுகளைப் ரீட்வீட் செய்வதையும் தவர்க்கவும்" என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பதிவு: "சென்னை பெருநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் குறைகள், ஆலோசனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற தகவல்கள் பறிமாற்றத்திற்கான தளமாகும். எனவே, இங்கு தனிப்பட்ட மற்றும் பொது நலன் தொடர்பற்ற பதிவுகளைப் பதிவு செய்வதையும், Retweet செய்வதையும் தவர்க்குமாறு வேண்டுகிறோம்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு யாரைக் குறிப்பிடுகிறது? தங்களுக்காக தாங்களே காவல் துறை இட்ட பதிவா என்றெல்லாம் நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.