

சென்னை: ட்விட்டரில் ‘மாட்டுக் கறி’ என்ற புகைப்படத்துடன் ஒருவர் பதிவிட்டதற்கு, சென்னை காவல் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது’ என்று பின்னூட்டத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அபுபக்கர் என்பவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் மாட்டுக் கறி என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை 7.25 மணிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து "இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது" என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள், காவல் துறையின் இந்தப் பதிவுக்கு கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
குறிப்பாக, திமுக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரும் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான பதிவில், " Who handles this ID handle., Why what is wrong with that post. அந்தப் பதிவில் என்ன தப்பு? என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல் துறை எதன் அடிப்படையில் இப்படி தேவையற்ற அறிவுரை வழங்குகிறது? கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று தெரிவித்திருந்தார். அவர் மட்டுமின்றி பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ரிப்ளை பதிவை நீக்கிய காவல் துறை, அது தொடர்பான விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், “அபுபக்கர், தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத் தேர்வினைக் குறித்தல்ல" என்று விளக்கம் அளித்து இருந்தனர்.
சென்னை காவல் துறையின் பதிவு நீக்கப்பட்டாலும், அதன் ஸ்க்ரீன் ஷாட்களுடன் விமர்சனங்களும் கருத்துகளும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. காவல் துறை பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அவற்றில் இடம்பெறுகின்றன.