

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது தொழுவந்தாங்கல் கிராமம். இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிமெண்ட் உருவ சிலையை அமைத்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே கடந்த 2010-ம் ஆண்டில் வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எம்ஜிஆர் சிலையின் அருகே ஜெயலலிதாவின் சிலை ஒன்றை அதிமுகவினர் வைத்தனர்.
இந்த ஜெயலலிதா சிலை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா சிலையை அகற்றினர்.
இதையறிந்த அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர்செந்தில்குமார் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட அதிமுகவினர், தொழுவந்தாங் கலில் திரண்டு, நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரையில் விடிய விடிய சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், ஜெயலலிதா சிலையை அகற்றியது போல, கருணாநிதியின் சிலையையும் அகற்ற வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து நேற்றுக் காலை சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் பவித்ரா தலைமையிலான வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உதவியோடுகருணாநிதி சிலையையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் கருணாநிதி சிலையை எடுத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். “முறையான அனுமதி பெற்று சிலையை வைக்க வேண்டும்” என்று அப்போது வருவாய் துறையினர் கூறினர். அதற்கு திமுகவினர், ‘ஏற்கெனவே உளள் எம்ஜிஆர் சிலையும் அகற்ற வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.